அக்னி பகவான் புறா வடிவம் எடுத்து சிபிச் சக்கரவர்த்தியை சோதித்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்க, இத்தலத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டமையால் 'திருக்குருகாவூர்' என்று அழைக்கப்பட்டது. மகாவிஷ்ணு ஒரு சாபத்தினால் வெள்விடையாக மாறினார். சாபம் நீங்க இங்கு வந்து பூசை செய்து சாபவிமோசனம் பெற்றார். அதனால் 'வெள்விடை' என்றும் அழைக்கப்பட்டது. அதுவே காலப்போக்கில் 'வெள்ளடை' என்றும் மாறியது என்று தலவரலாறு கூறுகிறது.
மூலவர் 'வெள்ளடையீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'காவியங்கண்ணி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள். ஒரு கால பூஜை (காலை 10-12) மட்டுமே நடைபெறுகிறது.
இத்தலத்திற்கு வந்த திருஞானசம்பந்த சுவாமிகளுக்கு தாகம் எடுக்க, இறைவன் தாக சாந்தி செய்வித்தார். இதை நினைவுகூறும் வகையில் தை அமாவாசையன்று சுவாமி தீர்த்தம் கொடுக்கும் விழாவாக கொண்டாடப்படுகிறது. அப்போது தீர்த்தம் பால் நிறமாக மாறும் அற்புதம் நடைபெறுகின்றது.
இறைவன், சுந்தரருக்கு கட்டமுதும், தண்ணீரும் அளித்த தலம். சீர்காழியை தரிசித்த பின்னர் இத்தலம் நோக்கி வந்தபோது வழியில் சுந்தரமூர்த்தி சுவாமிகளும், அவருடன் வந்த அடியார் கூட்டத்தினரும் பசியாலும், தாகத்தாலும் வருந்தினர். ஈசனார் வழியில் தண்ணீர்ப் பந்தலும், கட்டமுதும் அளிக்க ஏற்பாடு செய்து இக்கோயிலுக்கு வழிகாட்டி மறைந்தருளினார். இந்நிகழ்ச்சி சித்ரா பௌர்ணமியன்று நடைபெறுகிறது
திருஞானசம்பந்தரும், சுந்தரரும் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 8 மணி முதல் 12 வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 வரையிலும் திறந்திருக்கும். தொடர்புக்கு : முத்துக்குமார் குருக்கள் - 94437 85862.
|